August 25, 2018
தண்டோரா குழு
கேரள மாநிலத்தில் இன்று ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு,தமிழக முதலமைச்சர் கேரள மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துசெய்தியில்,
“திருவோணப் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
வரலாறு காணாத கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பாசத்தோடும்,நேசத்தோடும்,தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததுடன்,பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அரிசி,பால் பவுடர்,ஆடைகள்,போர்வைகள்,மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளது.
மேலும்,சகோதர உணர்வுமிக்க தமிழ்நாடு மக்களிடமிருந்து பலகோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு கேரள மாநிலத்திற்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்கள் அப்பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து,விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பிட தமிழ்நாட்டு மக்களின் சார்பில் எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்”.இவ்வாறு தெரிவித்துள்ளார்.