September 20, 2018
ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தின்படி நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் சீட்பெல்ட் அணிவது கட்டாயம் என்றும்,அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிகள் இருந்தும் அதனை அரசு அமல்படுத்தவில்லை என்று சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இவ்வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் மணிக்குமார்,சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது கூறிய நீதிபதிகள்,விதிகளை அமல்படுத்துங்கள் என்று சொன்னால் நீதிமன்றம் கட்டாயப்படுத்துவதாக நீதிமன்றத்தின் மீதும்,நீதிபதிகள் மீதும் திசை திருப்புகின்றனர்.நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் விதிகளை முறையாக அமல்படுத்துங்கள் என அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும்,பணியில் இருக்கும் காவல்துறையினர் உள்ளிட்ட பலர் சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாமல் சாலையில் செல்கின்றனர்.தேசியக்கொடியுடன் செல்லும் வாகனங்களில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை கூட கொடுப்பது இல்லை என்றும்,நாங்கள் நீதிபதியை மட்டும் குறிப்பிடவில்லை,தேசியக்கொடியுடன் வலம் வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் குறிப்பிடுகிறோம் என்றுக் கூறி இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில்,இன்று மோட்டார் வாகன சட்டத்தின்படி நான்குசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் சீட்பெல்ட் அணிவது கட்டாயம் என்றும், அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,இந்த அரசாணையை அமல்படுத்தியது குறித்து அக்டோபர் 23ம் தேதி அறிக்கையாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.