September 11, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம் கரவளி மாதப்பூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க விவசாய நிலத்தை முன்னறிவிப்பு இன்றி கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து,கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் கரவளி மாதப்பூர் – கணியூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக அப்பகுதியை சேர்ந்த கலாமணி என்பவரின் விவசாய நிலத்தை முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் கையகப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் முறையான முன்னறிவிப்பு இன்றி நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து,கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும்,விவசாய நிலத்தில் ரயில்வே மேம்பால பணிகள் செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும்,கருர் – கோவை ஆறு வழிச்சாலை திட்டத்திற்காக மேம்பாலம் கட்ட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த ரயில்வே மேம்பாலம் பயனற்றது எனவும் கூறிய விவசாயிகள்,விவசாய நிலத்திற்கு பதிலாக தரிசு நிலத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தனர்.