September 6, 2018
தண்டோரா குழு
ஓரினச் சேர்க்கை தனிநபர் விருப்பம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு நாடு முழுவதும் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் 377வது பிரிவை விலக்கிக் கொள்ள 2001ம் ஆண்டு நாஸ் என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் கடந்த 2009ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம்,‘பரஸ்பர சம்மதத்துடன் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாகாது’ என பரபரப்பு தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பு தன்பாலின சேர்க்கையாளர்கள்,திருநங்கைகளின் நல உரிமை அமைப்புகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.எனினும் மத அமைப்புகள் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டன.
இதையடுத்து,மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள்,கடந்த 2013ம் ஆண்டு அளித்த தீர்ப்பில்,டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தனர். இதனை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.பிரபல பாலிவுட் நடன இயக்குனர் என்.எஸ்.ஜோஹர்,பத்திரிகையாளர் சுனில் மெஹ்ரா போன்ற பல்துறை பிரபலங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதற்கிடையில், கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு,5 நீதிபதிகள் கொண்ட அLரசியல்சாசன அமர்விற்கு மாற்றம் செய்தது.
இதனைத்தொடர்ந்து,தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இந்த அமர்வு,இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. விசாரணையின் போது,நீதிமன்றத்திடமே முடிவை விட்டுவிடுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து,இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்கள் கடந்த ஜூலை 17-ம் தேதி நிறைவடைந்ததையடுத்து,தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில்,பல ஆண்டுகளாக பெரிதும் எதிப்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும்,இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும் கருத்து தெரிவித்தனர்.அத்துடன்,ஓரினச்சேர்க்கையை குற்றச் செயலாக கருதும் சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உத்தரவிட்டனர்.இதைத்தொடர்ந்து,மும்பை,டெல்லி, சென்னை,பெங்களூரு உள்பட நாடு முழுவதும் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.