August 21, 2026
தண்டோரா குழு
PSG செவிலியர் கல்லூரி கடந்த 32 ஆண்டுகளாக செவிலியர் கல்வித் துறையில் சிறப்பாக செயல்பட்டு,கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இளநிலை, முதுநிலை மற்றும் Ph.D.செவிலியர் கல்வித் திட்டங்களை இக்கல்லூரி வழங்கி வருகிறது.PSG செவிலியர் கல்லூரி சார்பில் “ஒரு நூற்றாண்டு கால அக்கறை, சிறப்பு மிக்க எதிர்காலம்: நாளைய செவிலியர் கல்வியை மாற்றியமைத்தல்” என்ற தலைப்பில் தேசிய மாநாடு ஆகஸ்ட் 21, 2026 அன்று PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கல்வி வளாக அரங்கில் நடைபெற்றது.
மாநாட்டை PSG செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயதீபா ஆர்.தொடங்கி வைத்தார்.செவிலியர் கல்வியில் நிலவி வரும் பராமரிப்பு மற்றும் அக்கறையின் பாரம்பரியத்தைப் போற்றுவதுடன், எதிர்காலத்தை நோக்கிய புதிய பாதைகளை உருவாக்குவது மாநாட்டின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
செவிலியர் கல்வியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை தலைவர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு, உருவகப்படுத்துதல் அடிப்படையிலான கற்றல், அனைவரையும் உள்ளடக்கிய கற்பித்தல் முறைகள் மற்றும் பல்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட நவீன அணுகுமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் டாக்டர் எல்சா சரதோம்பி தேவி, டாக்டர் கே.ஜெயந்தி சண்முகம், டாக்டர் ஷீஜா ராஜன் டி.எம்.,டாக்டர் ரீட்டா லகானி, டாக்டர் ஜெனிட் ஆஸ்போர்ன் ஏ.,டாக்டர் கமலா இசக்கிமுத்து, டாக்டர் அனுராதா, டாக்டர் கவிதா, டாக்டர் எம். மும்தாஜ், டாக்டர் மகாராணி எஸ்.உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் புகழ்பெற்ற பேச்சாளர்கள் கலந்து கொண்டு செவிலியர் கல்வியில் உருவாகி வரும் மாற்றங்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து உரையாற்றினர்.
வகுப்பறைக் கற்றல் முதல் மருத்துவமனைப் பயிற்சி வரையிலும், உள்ளூர் செவிலியர் நடைமுறை முதல் உலகளாவிய சுகாதாரத் தாக்கம் வரையிலும் செவிலியர் கல்வியின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.தேசிய அளவில் நடைபெற்ற இம்மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500 பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் நிறைவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.PSG செவிலியர் கல்லூரி இணைப் பேராசிரியர் ராஜேஸ்வரி பி.எம். நன்றியுரை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து மாநாடு நிறைவடைந்தது.