October 4, 2026
தண்டோரா குழு
கோயம்புத்தூர் துடியலூரில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரத்யேக இருதய சிகிச்சை மையமான அவேரா இருதய மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது.
முழுமையான இதயப் பராமரிப்புக்கான ஒரு மருத்துவ மையத்தை உருவாக்க வேண்டும் என்ற பிரபல மருத்துவ நிபுணர்களான டாக்டர் ராஜ்பால் கே. அபைசந்த் மற்றும் டாக்டர் சந்திரசேகர் பத்மநாபன் ஆகியோரின் 30 ஆண்டுகால கனவு இம் மருத்துவமனையின் மூலம் நனவாகியுள்ளது.
துடியலூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணன் மஹாலில் நடைபெற்ற தொடக்க விழாவில், பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம் தலைமை விருந்தினராகப் பங்கேற்று மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் சங்கரா கண் அறக்கட்டளையின் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் ஆர்.வி. ரமணி, பிரிகோல் லிமிடெட் நிறுவனர் விஜய் மோகன், வி.எல்.பி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் . மலர்விழி, பின்னணிப் பாடகி சுஜாதா மோகன், மேயோ கிளினிக்கின் கௌரவப் பேராசிரியர் டாக்டர் சந்திரசேகர் கே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மேலும்,ஸ்ரீ கோயம்புத்தூர் குஜராத்தி சமாஜத்தின் தலைவர் பிரவேஷ் ஜேத்மால் மற்றும் ராஜஸ்தானி சங்கத்தின் தலைவர் சந்தோஷ் முந்த்ரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
இதயப் பராமரிப்பு மற்றும் தீவிர சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளித்து 100 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பிலிப்ஸ் அஸூரியன் 7-சீரிஸ் கேத் லேப்கள், இரண்டு உலகத்தரம் வாய்ந்த கெட்டிங்ஸே மாடுலர் அறுவை சிகிச்சை அரங்குகள், 18 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு , மற்றும் 16 படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்புப் பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய பிலிப்ஸ் இன்கிசிவ் கார்டியாக் சி.டி. வசதியும் இங்கு நிறுவப்பட்டுள்ளது.இருதயவியல், இருதய-மார்பக அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை, மயக்கவியல், தீவிர சிகிச்சை, நுரையீரல் மற்றும் கதிரியக்கவியல் துறைகளுடன் இணைந்து சிறுநீரகவியல், நரம்பியல், நாளமில்லாச் சுரப்பியல் உள்ளிட்ட கூடுதல் சிறப்புப் பிரிவுகளும் இங்கு இயங்கும். இவற்றுடன் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை, மருந்தகம் மற்றும் மேம்பட்ட சி.எஸ்.எஸ்.டி வசதிகளும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காகத் தயார் நிலையில் உள்ளன.
மருத்துவமனையின் தலைவரான டாக்டர் ராஜ்பால் கே.அபைசந்த்,30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும், 45,000-க்கும் மேற்பட்ட இருதய சிகிச்சைகளை மேற்கொண்ட அனுபவமும் கொண்டவர்.
அதேபோல் தலைமை இருதய-மார்பக அறுவை சிகிச்சை நிபுணரும் இயக்குநருமான டாக்டர் சந்திரசேகர் பத்மநாபன், 34 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் 10,000-க்கும் அதிகமான இருதய அறுவை சிகிச்சைகளையும், துடிக்கும் இதய அறுவை சிகிச்சை மற்றும் ரோபோடிக் இதய சிகிச்சைகளையும் வெற்றிகரமாகச் செய்த சர்வதேச அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.