September 26, 2018
தண்டோரா குழு
திருவாடானை எம்.எல்.ஏ கருணாசை போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் மற்றும் தியாகராய நகர் காவல்துறை துணை ஆணையர் குறித்தும் அவதூறாக பேசினார்.இதையடுத்து முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசியதாக எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,கடந்த 23-ம் தேதி காலை அவரை கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கபட்ட அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.இதற்கிடையில் கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில்,இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி கருணாசை போலீஸ் காவலில் விசாரிக்க மறுப்பு தெரிவித்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.