September 7, 2018
தண்டோரா குழு
முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு மு.க.அழகிரி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் 30 வது நாள் நினைவுநாள் அமைதிப் பேரணி கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.அதில் ஏராளமான ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அவருடன் அழகிரியின் மகன் தயாஅழகிரி,மகள் கயல்விழி உள்ளிட்டோரும் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி,”பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை என்றும்,கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி நடைபெற்றதாகக் கூறினார்.கருணாநிதி நினைவு பேரணிக்கு ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கு நன்றி.மேலும்,இந்த அமைதி பேரணியில் கலந்துக் கொண்ட கருணாநிதியின் உண்மையான தொண்டர்களுக்கும்,என் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றுக் கூறினார்.
இந்நிலையில் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில்,
தலைவர் கலைஞரின் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே…
“நான்… ஒரு தலைவன் அல்ல..
ஒரு மேடை பேச்சாளன் அல்ல..
ஒரு நடிகன் அல்ல..
தனி மனிதனாய்..
தொண்டனாகிய என் வேண்டுகோளை ஏற்று
என் தந்தை தலைவர் கலைஞரின்
30 வது நாள் நினைவு பேரணிக்கு அஞ்சலி செலுத்த என் மீது பாசங்கொண்டு அலைகடலென வருகை தந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தங்களின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்”என்று தெரிவித்துள்ளார்.