October 12, 2018
தண்டோரா குழு
#MeTooIndia புகார் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
இந்தியாவில் #Metoo என்னும் ஹாஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள் தற்போது #MeToo இயக்கத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர்.திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,#MeTooIndia புகார் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.இந்த குழுவில் மூத்த நீதித்துறை அதிகாரிகள்,சட்டத்துறை நிபுணர்கள் இடம்பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் #Metoo மூலமாக வெளியாகும் பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்பாக பொது விசாரணையை மேற்கொள்ள மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ள மேனகா காந்தி பெண்கள் அச்சமின்றி வெளிப்படையாக புகார் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும்,பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்க வேண்டும்.அவர்கள் மீதும் அவர்களுடைய வலியின் மீதும் எனக்கு நம்பிக்கையுள்ளது.ஒவ்வொரு புகாரும் பின்னால் அதிர்ச்சியும் இடம் பெற்றுள்ளது.மத்திய அரசு அமைக்கும் குழுவில் மூத்த நீதித்துறை மற்றும் சட்டத்துறை நிபுணர்கள் இடம் பெறுவார்கள்.இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விவகாரங்களை தீர்ப்பது தொடர்பான வழிமுறைகளை மெற்கொள்ளவும் குழு நடவடிக்கையை எடுக்கும் என மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.