September 3, 2018
தண்டோரா குழு
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை பெய்தது.பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 483 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 140 பேர் காணவில்லை என்றும்,தற்போது வரை 305 நிவாரண முகாம்களில் 59,296 பேர் தங்கியிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து நிதி உதவிகள் மற்றும் பொருளுதவிகள் இன்னும் அளிக்கப்பட்டு வருகிறது.கேரள மக்களின் நிலையை அறிந்து பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இதிலும் சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடந்து வருகின்றது.
அந்த வகையில் தற்போது பிச்சைக்காரர் மோகனன் என்பவர் நான்கு கிலோ மீட்டர் நடந்து சென்று கேரள மக்களுக்காக 94 ரூபாய் நிதியுதவி அளித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் பூஞ்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகனன்.தினமும் பிச்சை எடுத்து சாப்பிட்டு தனது அன்றாட வாழ்க்கையை கழித்து வருகிறார்.இந்நிலையில்,கேரள மக்களுக்காக தான் சேமித்து வைத்த பணத்தை கொடுக்க முடிவு செய்துள்ளார்.அதற்காக எரட்டுப்பெட்டா முன்னாள் முனிசிபல் சேர்மேன் ரஷீத் இல்லத்திற்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளார்.அந்த வீட்டில் உள்ளவர்களிடம் சேர்மேனை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அப்போது,வெளியே வந்த சேர்மன் மோகனனை பார்த்ததும் பிச்சை கேட்டு வந்துள்ளார் என்று எண்ணி 20 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.
அப்போது,”அய்யா, நீங்க கொடுத்த பணத்தோட இதையும் சேர்த்து நம்ம மக்களுக்காக முதலமைச்சர் நிவாரண நிதியில் கொடுத்துடுங்க” என்று மோகனன் கூறியிருக்கிறார்.பின்னர் தான் முடித்து வைத்திருந்த சிறிய பையில் இருந்து சில்லரைகளை எடுத்த மோகனன்,சேர்மேன் கொடுத்த 20 ரூபாயையும் சேர்த்து 94 ரூபாயை கொடுத்திருக்கிறார்.
மோகனனின் இந்த செயலை பார்த்து கண்கலங்கியுள்ளார் அந்த சேர்மேன்.பின்னர் “ஒரு நிமிஷம் அப்படியே இருங்க” என சொல்லிவிட்டு, தனது செல்போன் மூலம் மோகனனை போட்டோ எடுத்து,அதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்,தனது ஏழ்மை நிலையிலும்,அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மோகனனை தனது முகநூலில் பாராட்டியுள்ளார்.இந்த பதிவை பார்த்த பலரும் மோகனனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால்,தனக்கு குவிந்த வாழ்த்துக்களை பற்றி மோகனன் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.