September 6, 2018
தண்டோரா குழு
கேரளாவில் எலிக்காய்ச்சல் பாதிப்பால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் சூழலில்,கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் எலிகாய்ச்சல் பாதிப்பிற்கு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் ஒருவர் எலிக்காய்ச்சல் பாதிப்பால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடானது.தற்போது அங்கு வெள்ளம் முழுவதுமாக வடிந்து மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில்,தொற்றுநோய்கள் தற்போது பரவி வருகிறது.குறிப்பாக அங்கு எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.எலிக்காய்ச்சலால் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.எலிக்காய்ச்சல் என அழைக்கப்படும் லெப்டோபைரோசிஸ் ஒரு தொற்று நோயாகும்.இந்நோய் விலங்குகளில் தான் பெரும்பாலும் பரவுகிறது.பெரும்பாலும் எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலமாக இந்நோய் ஆரோக்கியமான மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்குப் பரவுகிறது.இக்கிருமிகள் வெளியேற்றப்படும் நீரிலோ அல்லது ஈரமான மண் பகுதியிலோ காரத்தன்மை அதிமாகக் காணப்படின் இக்கிருமிகள் பல்கிப் பெருகுவதாக கூறுகின்றனர்.
கோவை மாவட்டத்தை பொறுத்த கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.குறிப்பாக கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதிப்பால் வருபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் எலிக் காய்ச்சல் பாதிப்பு எவ்வாறு பரவுகிறது மற்றும் அதன் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்தும்,விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும்,காய்ச்சல்,கண் எரிச்சல் இதுபோன்ற சாதாரண காய்ச்சலுக்கான அறிகுறிகளே இந்த காய்ச்சலுக்கும் இருப்பதால்,காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சுயமருத்துவம் மேற்கொள்ளாமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.மேலும்,இந்த காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் இல்லாததால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.