September 22, 2018
தண்டோரா குழு
கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு செப்.24 வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவனந்தபுரம் போலீசார்,ஜலந்தர் பகுதிக்கு சென்று பிஷப் ஃப்ராங்கோ மூலக்கல்லிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் பிராங்கோ மூலக்கல் இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு நேற்று முன்தினம் ஆஜரானார்.கடந்த இரண்டு நாளாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில்,நேற்று மூன்றாவது நாளாக கொச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நடந்த விசாரணையில் பிஷப்புக்கு எதிரான குற்றச்சாட்டில் உண்மையிருப்பதாகத் தெரியவந்ததை அடுத்து,அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட பிராங்கோ,காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது,தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் கூறி உள்ளார்.இதைத்தொடர்ந்து,மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இந்நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற விசாரணையின் போது,பிஷப் பிராங்கோவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.மேலும்,பிஷப் பிராங்கோவை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.