September 7, 2018
தண்டோரா குழு
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான சிசிடிவி காட்சிகளை 7 நாட்களில் ஒப்படைக்க அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5ம் தேதி காலமானார்.இதற்கிடையில்,அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கபட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆணையம் இதுவரை 85க்கு மேற்பட்டோரிடம் விசாரணையும்,45க்கு மேற்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடத்தியுள்ளது.
அதேபோல்,ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இந்த விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை.இதனால்,ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி அப்போலோ மருத்துவமனை இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.இதனையடுத்து இன்று அப்போலோ மருத்துவமனை தலைமை நிர்வாகி சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார்.அப்போது,ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடுதான் என அறிக்கை வெளியிட காரணம் என்ன? என அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும்,சிசிடிவியை நிறுத்த சொன்னது யார்? என்றும் பல உறுப்புகளில் பிரச்சனைகளுடன் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா,அவர் நினைக்கையில் வீடு திரும்புவார் என கூறியது ஏன் என்றும்,வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என வெளியிட்ட அறிக்கைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விளக்க வேண்டும் எனவும் அப்போலோ மருத்துவமனைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து,ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறந்த நாள் வரை உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.