September 10, 2018
தண்டோரா குழு
டூஷீன் எனும் தசை சிதைவு நோய் விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 7ம் தேதி ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.இதை முன்னிட்டு,எம்.டி.சி.ஆர்.சி நிறுவனம் சார்பில் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தசை சிதைவு நோய் விழிப்புணர்வு தின விழா நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி டீன் அசோகன் தலைமை தாங்கினார்.ராயல் கேர் உயர் சிறப்பு மருத்துவமனை தலைவர் மாதேஸ்வரன் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். நோபல் பவுண்டேசன் நிறுவன அறங்காவலர் ரமேஷ் அதோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாரதியார்,விநாயகர் மேடமிட்டு வந்தனர்.இதனைத்தொடர்ந்து ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
தசை சிதைவு நோய் குறித்து எம்.டி.சி.ஆர்.சி. தன்னார்வ நிறுவனர் லட்சுமி கூறுகையில்,
“உலகம் முழுவகும் 3500 குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தைக்கு தசை சிதைவு நோய் ஏற்படுகிறது.இந்நோய் மரபு வழி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.ஆண் குழந்தைகளை மட்டும் தாக்கும் இந்நோய்க்கு மருந்து கண்டறியப்படவில்லை.இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஆண்டுதோறும் இந்த விழிப்புணர்வு விழா நடைபெறுகிறது”என்றார்.