September 5, 2018
தண்டோரா குழு
சென்னையில் நடந்த பேரணிக்கு எந்த காரணமும் இல்லை.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்த பேரணி நடந்தது என மு.க.அழகிரி கூறினார்.
கருணாநிதியின் மறைவுக்கு பிறகு கடந்த மாதம் 13-ந்தேதி மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார்.அப்போது,
செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி,”எனது அப்பாவிடம் வந்து ஆதங்கத்தை தெரிவித்தேன்.அது என்ன என்பது உங்களுக்கு இப்போது தெரியாது. கருணாநிதியிடம் உண்மையாக விசுவாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்” என்று அதிரடியாக கூறினார்.
அதன் பின்னர் சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5-ம் தேதி அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும்,அதில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் கலந்துக்கொள்வார்கள் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து கருப்பு சட்டை அணிந்து பேரணியாக வந்த ஏராளமான ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அவருடன் அழகிரியின் மகன் தயா அழகிரி,மகள் கயல்விழி உள்ளிட்டோரும் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி,
“பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை என்றும்,கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி நடைபெற்றதாகக் கூறினார்.கருணாநிதி நினைவு பேரணிக்கு ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கு நன்றி.மேலும்,இந்த அமைதி பேரணியில் கலந்துக் கொண்ட கருணாநிதியின் உண்மையான தொண்டர்களுக்கும், என் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”.இவ்வாறு பேசினார்.