September 18, 2018
தண்டோரா குழு
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் தமிழக அமைச்சர்களை பதவி விலக கோரி கோவையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் தமிழக அமைச்சர்களை பதவி விலகக் கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,ஆளும் அரசின் முக்கிய துறைகளை வைத்திருக்கும் அமைச்சர்களே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பதால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும்,ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,திமுக துணைப் பொதுசெயலாளர் வி.பி.துரைசாமி , சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் , முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் பேட்டியளித்த திமுக துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி உலக வங்கியின் விதிமுறைகளை மீறி முதல்வரின் உறவினர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டு இருப்பதாகவும்,உயர் நீதிமன்றம் அதை கணக்கில் எடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் குட்கா வழக்கில் லஞ்சம் கொடுத்த மாதவராவ் கைது செய்யப்பட்ட நிலையில்,லஞ்சம் வாங்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.இந்தியாவிலேயே அதிகளவு ஊழல் செய்தவர் கோவை மாவட்ட அமைச்சர் வேலுமணி என தெரிவித்த அவர்,பிளிசிங் பவுடர்,பினாயில் போன்றவற்றிலும் எஸ்.பி வேலுமணி ஊழல் செய்து இருக்கின்றார் என தெரிவித்தார்.இதே போல பொது விநியோகத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.