October 16, 2018
தண்டோரா குழு
கோவையில் ரயில்வே சுரங்கப்பாதையை விரைந்து திறக்கக்கோரி பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
கோவை இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரயில்வே பாதை உள்ளதாகவும்,இந்த ரயில்வே பாதையில் நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வரும் நிலையில்,இந்த ரயில்வே பாதையை கடந்து தான் இருகூர் அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருவதாக தெரிவித்தனர்.அவ்வப்போது,ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும்,கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறும் மாணவர்கள்,இதனை தடுக்க கடந்த 3ஆண்டுகளுக்கு முன் ரூ.3கோடி மதிப்பில் சுரங்கப்பாதை பணிகள் துவங்கப்பட்டு இன்னும் முடியாமல் உள்ளதால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும்,ரயில்வே பணி முடிந்த நிலையில் நெடுஞ்சாலை பணிகள் தாமதத்தினால்,சுரங்கப்பாதை பணிகள் முடிவடையாமல் உள்ளதாகவும்,இதனால் அச்சத்துடனே ரயில்வே பாதையை கடந்து சென்று வருவதாகவும்,இல்லயென்றால் சுமார் 3கி.மீ., தொலைவிற்கு சுற்றி வர வேண்டிய நிலை உள்ளதாக கூறுகின்றனர்.இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர்,நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்வதாக கூறியதையடுத்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.