September 6, 2018
தண்டோரா குழு
வால்பாறையில் இருந்து கோவைக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து கோவையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு,போக்குவரத்து ஊழியர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
வால்பாறை பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து ஓட்டுனரான வேல்முருகன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளார்.அப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாகக் கூறி அதிகாரிகள், இவரை கோவைக்கு இடமாற்றம் செய்து உள்ளனர்.இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு வேல்முருகன் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். பிறகு உடனடியாக அவரை போக்குவரத்து அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.