September 26, 2018
தண்டோரா குழு
கோவை மாநகரில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சீர்செய்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி,கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ,மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யாவை சந்தித்து நேரில் மனு அளித்தார்.அப்போது,மாநகரில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளதாகவும்,உதாரணத்திற்கு கூற வேண்டுமானால்,ஆத்துப்பாலத்திலிருந்து,உக்கடம் செல்லும் சாலை மேம்பால பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.தண்டுமாரியம்மன் கோவில் அவினாசி சாலை மேம்பாலம் பகுதி,காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சித்தாபுதூர் சந்திப்பு,மின்மயான பகுதிகளில் மாலை நேங்களில் கடுமையான போக்குவரத்து நிலவி வருகின்றது.இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அவ்வழியே நடந்து செல்ல முடியாத அவலநிலை இருப்பதாகவும்,இதற்கு அப்பகுதியில் தனியார் வாகனங்கள் சாலையின் நடுவே நிறுத்தி வைத்துள்ளது தான் என குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக,ஏற்கனவே கடந்த 2017 ம் ஆண்டு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.மேலும்,இந்த போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய கடந்த ஜனவரி மாதம் காவல்துறை ஆணையாளரிடத்தில் ஏற்கனவே கடிதம் கொடுத்ததாகவும் தற்போது,மாநகரின் போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதிகளை குறிப்பிட்டு கடிதம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.சிங்காநல்லூர் பேருந்துநிலையம்,காமராஜர் சாலையிலிருந்து,காவல்நிலையம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதாகவும்,இந்த நெரிசலை சீர்படுத்தி நடவடிக்கை எடுக்க கடந்த ஓர் ஆண்டாக வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்”.இவ்வாறு பேசினார்.