September 3, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன.இதனை தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில் கருமத்தாம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் தனிப்படை போலீஸார் அன்னூர் அவிநாசி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி விசாரித்தனர்.அப்போது காரில் ஒரு பெண்ணும் ஆணும் இருந்துள்ளனர்.அவர்களை விசாரித்த போது அவர்கள் இருவரும் முன்னுக்கும் பின்னாக பதிலளித்துள்ளனர்.
இதனால் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கையில் அவர்கள் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்றும் உடன் இருந்த பெண் அதே பகுதியை சேர்ந்த அவனது கள்ளகாதலி சுகன்யா என்று கூறியுள்ளனர்.இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கையில் பகல் நேரங்களில் கணவன் மனைவி போல் சென்று பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்தது. இவர்களிடம் அன்னூர் பகுதியில் திருடப்பட்ட 25 பவுன் நகை மற்றும் திருடிய பணத்தில் வாங்கப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் இருவரையும் கைது செய்து போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.