September 6, 2018
தண்டோரா குழு
கோவை உக்கடம் பெரியகுளத்தில் வேட்டையாடப்பட்ட பெலிக்கன் பறவையை மீனவர்கள் உதவியுன் ஓசை அமைப்பு மற்றும் WNCT தன்னார்வலர்களால் மீட்டு வனத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
கோவையில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் கோவையில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி உள்ளது.இதனால் அங்கு பறவைகளின் எண்ணிக்கை வரவு அதிகரித்துள்ளது.இதில் தண்ணீரில் வாழும் பறவையான பெலிக்கன் பறவைகள் உக்கடம் பெரியகுளத்தில் அதிக அளவிலே காணப்படுகிறது.
இந்நிலையில்,நேற்று உக்கடம் பெரியகுளத்தில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.அப்போது ஒரு பெலிக்கன் பறவை எந்த வித அசைவுமின்றி தண்ணீரில் இருந்ததை கண்ட மீனவர்கள் அதன் அருகில் சென்று பார்த்தனர்.அப்போது அந்த பறவை தலையில் அடிப்பட்டு காயத்துடன் இருந்ததை கண்ட மீனவர்கள் ஓசை அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைதொடந்து அங்கு வந்த ஓசைசெய்யது மற்றும் WNCT தன்னார்வலர் சிராஜுதீன் இணைந்து அந்த பறவை மீட்டு கோவை கால்நடை மருத்துவமனை கொண்டு சென்று முதலுதவி அளித்துள்ளனர்.பின்னர்,வ.உ.சி உயிரியல் பூங்காவுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று பார்த்த போது அந்த பறவையை யாரோ வேட்டையாடிதால் தான் அதன் தலையில் அடிபட்டது தெரிய வந்துள்ளது.இதையடுத்து சிகிச்சைக்கு பிறகு அந்த பறவையை வனத்துறையிரிடம் ஒப்படைத்து உள்ளனர்.
இதுகுறித்து ஓசை செய்யதிடம் கேட்டபோது,
“மழை பெய்து குளங்களில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் மீன்களின் எண்ணிக்கை அதிமாகி உள்ளது.இதனால் பல வகையான பறவைகளும் குளங்களில் தஞ்சம் அடைய ஆரம்பித்துள்ளது.குளங்களில் உள்ள மீன்களை சாப்பிட பறவைகள் அதிகம் வருவதால் சிலர் அதை வேட்டையாடும் நோக்கத்தில் உள்ளனர்.இதனை தடுக்க வேண்டும்.சுற்றுச்சூழலுக்கு பறவையின் பங்கும் அதிகம் உள்ளது.பறவைகள் மூலம் தான் சில மரங்கள் உருவாகின்றது.இந்த பறவைகளை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும்.இனி வேட்டையாடுவது தொடர்ந்தால் இந்த பறவை இனங்கள் அழிவை நோக்கி சென்று விடும்.இதனால் இந்த பறவைகளை பாதுகாக்க வேண்டும் என வனத்துறையுடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
மேலும்,குளங்களில் தற்போது அதிகளவு மீன்கள் உள்ளதால் இங்கு வரும் பறவைகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.இதனால் பறவை வேட்டையாடுதலும் அதிகம் நடக்கும்.அதனால் ஓசை தன்னார்வலர்கள் மீனவர்களுடன் இணைத்து குளங்கள் உள்ள பகுதியில் வேட்டையாடுதலை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணிக்க உள்ளோம்”என்றார்.