October 15, 2018
நேயப் பிரியன்
காலம் காலமாய் காட்டின் வளத்தைப் பாதுகாத்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த மலைவாழ் மக்கள் இன்று சில சமூக விரோதிகளுக்கு துணை போகத் துவங்கியுள்ளனர்.தங்கள் வளத்தைப் பெருக்கிக் கொள்ள வனத்தின் வளங்களை அழிக்கத் துவங்கியுள்ளனர்.மரங்களை வெட்டி காட்டை அழித்து தரிசு நிலங்களாக்கி அவற்றில் கஞ்சா பயிரிடுவது,சந்தன மரங்களை வெட்டுவது,இவை எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே போய் தற்போது சிறுத்தைகளை வேட்டையாடத் துவங்கி உள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனச்சரகத்தில் இருந்த மெலினிஷியம் லெப்பெர்டு என்ற சொல்லக் கூடிய ஒரே ஒரு கருஞ்சிறுத்தை உள்பட 3 சிறுத்தைகளைக் கொன்று அதன் கை,கால் மற்றும் தலையை வெட்டி பல்,நெகம்,தோல் போன்றவற்றை எடுத்துக் கொண்டு கான்டூர் கால்வாயில் சடலத்தை வீசியுள்ளது அதே பகுதியில் வசிக்கும் ஒரு கும்பல்.
குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களைப்பிடித்து விசாரணை மேற்கொண்டு வேட்டையாடிப் பொருள்களை பறிமுதல் செய்ய செல்லும் போது வனஊழியர்கள் மேல் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது வரலாறு காணாத புதுமை என்கிறார் வனத்துறையைச் சேர்ந்த ஒரு நேர்மையான உயர் அதிகாரி. மலைவாழ் மக்கள் வாக்கு வங்கியைப் பெற அவர்களுக்கு பின்புலமாகச் செயல்படுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சியின் நேர்மையற்ற பிரமுகர். அவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கன்றன.
சிறுத்தை வேட்டை விசாரணைக்கு எதிராக தொடர் போராட்டம் விசாரணை செய்ய முடியாமல் வனத்துறை திணறல்
சிறுத்தையை வேட்டையாடிய வழக்கு விசாரணைக்கு எதிராக சிலர் தொடர் போராட்டம் நடத்துவதால் விசாரணை செய்ய முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.958 சதுர கி.மீ.,பரப்பு கொண்ட ஆனைமலைபுலிகள் காப்பகத்தில் புலி,சிறுத்தை,யானை,காட்டுமாடு பல்வேறு வகையான பறவைகள்,உலகின் வேறு எந்த பகுதியிலும் இல்லாத அரிய வகை உயிரினங்களான மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் சிங்க வால் குரங்கு,வரையாடு,மற்றும் யுனஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக அறிவிக்கப்பட்ட கிராஸ் ஹில்ஸ் போன்றவை இங்குதான் உள்ளது.அறிய வகைத் தாவரங்கள்,மூலிகை செடிகள் என பல்லுயிர்கள் வாழ்ந்து வரும் ஒரு சொர்கம் தான் ஆனைமலை புலிகள் காப்பகம்.
இந்த காப்பகம் வன உயிரினங்களின் சிறந்த வாழிடமாக இருந்த போதும்,வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதும் தொடர்ந்து வருகிறது.வனத்துறையில் குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள்,போதுமான ஆயுதங்கள் இல்லாதது,எதிரிகளை சமாளிக்க போலீஸாரை போன்றபயிற்சி இல்லாதது,வனத்துக்குள் அரசியல் மற்றும் காவல்துறையின் அத்துமீறல் என பல்வேறு காரணங்கள் வனவிலங்கு வேட்டையர்களுக்கு சாதகமானதாக அமைந்துவிட்டது.இருந்த போதும்,குறைந்த எண்ணிக்கையில் உள்ள பணியாளர்களை கொண்டு ரோந்துபணி,வேட்டை தடுப்பு பணி,கணக்கெடுப்புபணி, தீத் தடுப்பு,விவசாய பகுதிகளுக்கு வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்துவது என வனத்துறையினரும் தங்களால் இயன்ற அளவு பணிகளை செய்து வருகின்றனர்.
சிறுத்தையை எளிதாக வேட்டையாட வைக்கப்படும்“சுருக்கு”
சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை கண்காணித்து அதன் வழித்தடத்தில் சிறிய இரும்பு கம்பிகளில் சுருக்கு வைத்து விடுகின்றனர் வேட்டையர்கள். அந்த சுருக்கு கம்பியில் மாட்டிக்கொள்ளும் சிறுத்தைகளை கட்டை மற்றும் இரும்பு தடியால் அடித்துக் கொன்ற பின் நகம்,பற்கள் போன்றவற்றை வேட்டை கும்பல் திருடிச்சென்று விடுகின்றனர்.
பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட காண்டூர் கால்வாயில் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி அழுகிய நிலையில் தலை வெட்டப்பட்டு நகம்,பற்கள் திருடப்பட்ட நிலையில் சிறுத்தை ஒன்றின் உடல் கண்டெடுக்கப்பட்டது.வனத்துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ததில் அது வேட்டையாடப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணையைத் துவங்கி மலைவாழ்மக்கள் சிலரிடம் விசாரணையை நடத்தினர்.கடந்த 11-ம் தேதி பந்தக்கல் அம்மன் பதியைசேர்ந்த முருகன்(35),கனகராஜ்(27),குமார்(34),அருண்(19) ஆகிய நான்கு பேரையும் வனத்துறையினர் ஆழியாறு சோதனைச்சாவடிக்கு விசாரணைக்காக அழைத்துசென்றனர்.
விசாரணை நடைபெற்றுகொண்டிருந்தபோது,அருகில் உள்ள பட்டா நிலத்தில் வாழ்ந்து வரும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அந்த கூட்டத்தின் மூப்பர் (தலைவர்) என்ற சொல்லக்கூடிய நபர் தலைமையில் சோதனைச்சாவடிக்குள் அத்துமீறி கத்தி,அரிவாள்,கடப்பாறை போன்ற ஆயுதங்களுடன் நுழைந்து வனத்துறையினரை மிரட்டி விசாரணைக்காக அழைத்து வந்த நான்கு பேரையும் தங்களுடன் அழைத்து சென்றனர்.
இதனால்,வனத்துறை அதிகாரிகள் விசாரணை தடைபட்டது.மேலும்,ஆனைமலையில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டமலைவாழ் மக்கள் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் வழிகாட்டுதலின் பேரில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவா கபோராட்டத்தில் ஈடுபட்டதாக் கூறப்படுகிறது.
போராட்டக்காரர்கள்,ஆழியாறு காவல்நிலையத்தில் வனத்துறை மீது புகார்அளித்ததுடன்,கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற இடங்களிலும் வனத்துறையினர் மீது புகார் அளித்தனர்.இதனால்,வனத்துறையினர் மீது போலீஸ் விசாரணை,வருவாய்த்துறை விசாரணை, வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை என பல வகை விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறுத்தையை வேட்டையாடியவர்களை கண்டறிய வனத்துறையினர் விசாரணையை துவங்கியவுடனேயே,அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தும் தொடர் போராட்டங்கள் நடந்ததாலும்,பல்வேறு அரசுத்துறைகளும் வனத்துறை ஊழியர்கள் மீது விசாரணையைத் துவங்கிவிட்டதால்,தற்போது வனத்துறையினர் ஒவ்வொரு அரசுத்துறை விசாரணை குழுக்களுக்கு விளக்கம் கூறுவதும்,விளக்கக் கடிதம் தருவதுமாக இருந்து வருகின்றனர்.இதனால்,சிறுத்தை வேட்டையாடிய விசாரணை தொய்வு ஏற்பட்டுள்ளது.
சிறுத்தை வேட்டையாடியவர்களை பிடிக்க முடியுமா என்று கேள்வியும் எழுந்துள்ளது.மேலும்,வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படாதது என இவை எல்லாம் சேர்ந்து பணியில் ஈடுபாடில்லாத நிலைக்குக்கு வனஊழியர்கள் தள்ளப்படுவர்,விளைவு வேட்டைகள் கேட்பாரற்று காட்டை முழுமையாக அழிக்கும்வரை ஓயாது.
ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் மீது போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளதற்கு கோவையைச் சேர்ந்த “ஓசை” சுற்றுச் சூழல் அமைப்பு மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறியதாவது:
” இந்த சம்பவம் தமிழக வனத்துறை வட்டாரம் மட்டுமின்றி,இந்திய வனத்துறை வட்டாரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இயற்கை ஆர்வலர்களும் அதிருப்தியைடந்துள்ளதுடன்,கண்டனமும் தெரிவித்துள்ளனர்.ஏனென்றால்,தமிழக அளவில் மட்டுமின்றி,இந்திய அளவிலும் வன உயிரிங்களை வேட்டையாடு பவர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.குறிப்பாக புலி,சிறுத்தை போன்றவை வேட்டையாடப்பட்டால்,அவை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுவதுடன்,வேட்டையர்கள் மீது எண்ணென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,அந்த வழக்கின் போக்கு குறித்தும் மாநில வனத்துறையினர் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
வன உயிரினங்கள் வேட்டையாடப்பட்டால் வனப்பாதுகாப்பு சட்டப்படி வனத்துறையினர் விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது.இப்படி இருக்கும்போது, வனத்துறையினர் சிறுத்தை உடல் உறுப்புகளை திருடியதாக சந்தேகிக்கப்பட்டு,விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வனத்துறையினர் மீதுவழக்குபதிவு செய்துள்ளது வனப்பகுதியின் பாதுகாப்புமட்டுமின்றி வனஉயிரினங்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதுபோன்ற முன் உதாரண சம்பவங்கள் தமிழகம் மட்டுமின்றி,நாடு முழுவதும் வனக்குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு போராட்டம் நடத்தவும்,வனத்துறையினர் மீது போலீஸில் புகார் தெரிவித்து வனத்துறையின் விசாரணையை தடுத்து நிறுத்தி,குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள முன்உதாரணமாக அமைந்துவிடும்.வனக்குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்பட்டு,விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் கொடுத்த புகாரை போலீஸார் பெற்று வனத்துறையினர் மீது வழக்கு பதிவுசெய்வது நாட்டிலேயே இதுவே முதல் முறை என்றும் தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநிலை நீடித்தால் மலைவாழ் மக்கள் எந்த விலங்கையும் வேட்டையாடலாம் என்ற எழுதப்படாத விதி அமுலுக்கு வந்துவிடும்.அதனால் போலீஸார் வனத்துறை மேல் பதிந்த வழக்கை வாபஸ் பெற்று போலீஸ் தலையீடு இன்றி விசாரணை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது இயற்கை ஆர்வளர்களின் கருத்து.
கோவை மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் சிறுத்தை வேட்டை தொடர்பான விசாரணைக்கு பொள்ளாச்சி சார்-ஆட்சியர் காயத்ரியை அதிகாரியாக நியமித்தார். செப்டம்பர் 26-ம் தேதி சார்-ஆட்சியர் சிறுத்தையை வேட்டையாடிதாக வனத்துறையால் சந்தேகிக்கப்படும் நபர்களிடமும்,வனத்துறையினரிடம் விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார்.இந்நிலையில் தான் ஆழியாறு போலீஸில் வனத்துறையினர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்தது.
வனத்துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் பந்தக்கல் அம்மன் பதியைசேர்ந்த பரமசிவம் உட்பட சிலர் மீதும் சிலபிரிவுகளில் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் சிறுத்தை சில விஷமிகளால் விஷம் வைத்துக் கொள்ளப்பட்டது.இது தொடர்பாக குற்றவாளிகள் யாரும் இதுவரை படவில்லை என்பது வருந்தத்தக்கது.தற்போது இதே சரகத்தில் இரண்டு குட்டிகளுடன் ஒரு பெண் சிறுத்தை வலம் வருகிறது அவற்றுக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வளர்களின் கோரிக்கை”.