September 26, 2018
தண்டோரா குழு
கோவை கணபதி அருகே நேற்று மாலை பெய்த கனமழையில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கணபதி சங்கனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன் தினம் மற்றும் நேற்று மாலை கனமழை பெய்தது.இதன் ஒரு பகுதியாக கணபதி அடுத்த காமராஜபுரம் பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.இதனால் வீடு முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்த நிலையில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பார்க்காமலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும் இருந்ததையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை கணபதி சங்கனூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீடுகளுக்குள் புகுந்து வெள்ளத்தை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளிடம் பரிந்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.சாலை மறியல் காரணமாக கணபதி சங்கனூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.