September 6, 2018
தண்டோரா குழு
வழக்குகள் முடிந்த நிலையில் வனவிலங்குகளின் தோல்,பல்,கொம்பு ஆகியவை மாவட்ட வனஅலுவலர் அலுவலகத்தில் நேற்று தீயிட்டு அழிக்கப்பட்டன.
தோல்,தந்தம்,பற்கள் உள்ளிட்டவற்றுக்காக வனவிலங்குகள் வேட்டையாடப்படுகின்றன.இவ்வாறு வனவிலங்குகள் வேட்டையில்,ஈடுபடுபவர்களை வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் வனவிலங்குகளின் உறுப்புகள்,வழக்கு முடியும் வரை மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு,வழக்கு முடிந்தவுடன் தீயிட்டு எரிக்கப்படும்.
இந்நிலையில் கோவை வனக்கோட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில்,தொடரப்பட்ட வழக்குகள் முடிந்த நிலையில் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வனவிலங்குகளின்,உடல் உறுப்புகள் நேற்று மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் தீயிட்டு அழிக்கப்பட்டன.
இதில் பெண் யானையின் கோரைப்பற்கள்,சிறுத்தையின் பல்,தோல்,யானை துதிக்கையின் தோல்,மான் கொம்பு,காட்டுமாட்டின் கொம்பு உள்ளிட்டவை எரிக்கப்பட்டதாகவும்,வழக்குகளில் தொடர்புடைய இயற்கையாக உயிரிழந்த வனவிலங்குகளின் தோல்,பல்,கொம்புகளும் இதில் அடங்கும் என மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார்.