September 11, 2018
தண்டோரா குழு
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு செப்.,24 வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
கோவையில் 1998.,பிப்.,14 ம் தேதி,பல்வேறு இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 58 பேர் கொல்லப்பட்டனர் 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கேரள மாநிலம்,கோழிக்கோடு,பண்ணியங்காரா கிராமத்தை சேர்ந்த என்.பி.அலி என்பவரின் மகன் நூகு என்ற ரஷீத் என்பவர்,கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.இதனையடுத்து நீதிமன்றத்தால் அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில்,ரகசிய தகவல் அடிப்படையில்,கோழிக்கோட்டில் இருந்த நூகுவை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நூகுவை கோவை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார்.இதையடுத்து,20 ஆண்டுகளுக்கு பிறகு கைதான நூகுவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோவை 5ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.