September 19, 2018
தண்டோரா குழு
சாலைப் போக்குவரத்து வசதிகள் இல்லாத சத்தியமங்கலம் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி என்ற கிராமத்தில் அவசர காலம் கருதி 108-ன் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் தாயும் சேயும் நலமாக மீண்ட சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் முத்துகுட்டி(23).இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டியில் தற்காலிகமாக வசித்து வருகிறார்.கர்பிணி பெண்ணான இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை.இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துக்குட்டிக்கு இன்று காலை பிரசவவலி ஏற்பட்டது.
இதையடுத்து கர்பிணி பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அருகில் இருந்தவர்கள் இன்று காலை சுமார் 10.05 மணியளவில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் மேட்டுப்பாளையம் பகுதியில் தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அதிவேகமாக வாகனத்தை இயக்கி பெரிய கள்ளிப்பட்டியில் உள்ள கர்ப்பிணி வீட்டிற்கு சுமார் 10.30 மணிக்கு சென்றனர்.
ஆனால் அந்தப் பெண்ணுக்கு வலி அதிகமாகி பிரசவம் ஆக கூடிய சூழல் உருவாகியது.அதேபோல ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.இதனால் அந்த பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஊழியர்களான அவசரகால மருத்துவ உதவியாளர் ஸ்ரீதரன்(26) மற்றும் பைலட் ஆதி சிவபெருமாள்(31) ஆகியோர் சுமார் 20 நிமிடங்கள் போராடி பிரசவம் பார்த்தனர்.அப்போது முத்துக்குட்டிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.பின்னர் தாயும்,சேயும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களால் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் அவர்கள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.