September 4, 2018
தண்டோரா குழு
காவல் துறையை மோசமாக விமர்சித்து,இரு மதத்திற்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசிய பாஜக தலைவர் தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக மாநகர காவல் துறை ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கோவில் சொத்துக்கள் மீட்பு உண்ணாவிரத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை கலந்துகொண்டு பேசினார். அப்போது சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.இந்த ஆண்டும் மறுக்கப்பட்டால் காவிப்படை காக்கிகளை அடக்கியாளும் சூழ்நிலை தமிழகத்தில் உருவாகும் எனவும்,காக்கிகளுக்கு காவிப்படை தகுந்த பாடம் நடத்தும் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.இதனை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
தமிழிசை பேசியது காவல் துறையினருக்கு மிரட்டல்,சவால் விடுக்கும் வகையிலும்,சிறுபான்மையினரிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பாதுகாப்பாற்ற சூழ்நிலையை உருவாக்கும் வண்ணம் அவரது பேச்சு அமைந்துள்ளது.எனவே தமிழிசை சவுந்தர்ராஜன் மீது இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்துதல்,கொலை மிரட்டல் விடுத்தால் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக கோவை மாநகர ஆணையாளரிடம் மனு அளித்தனர்.