September 4, 2018
தண்டோரா குழு
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டு கைதான மாணவி சோபியாவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்,நேற்று மாலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.அப்போது அவர் பயணித்த விமானத்தில் இருந்த சோபியா என்ற மாணவி,‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என கோஷம் போட்டு அவரிடம் பிரச்சனை செய்தார்.
இதைத் தொடர்ந்து,தூத்துக்குடி விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியதும்,தமிழிசை சௌந்தரராஜனுக்கும் சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து,தமிழிசை சௌந்தர்ராஜன் அளித்தப் புகாரின் பேரில்,சோபியா மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அவர்,15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மாணவி சோபியா கைதிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து,அவர் மீதான வழக்கு இன்று மதியம் 12 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது விசாரித்த நீதிபதி, அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து,நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டதை தொடர்ந்து,சோபியா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார்.