September 22, 2018
தண்டோரா குழு
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி,கனிமொழி எம்.பி குறித்து அவதூறாக டிவிட்டரில் பதிவிட்டிருந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரலில் கனிமொழி எம்.பி.யை மறைமுகமாக தாக்கும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.இந்தப் பதிவுக்கு திமுக மற்றும் பல்வேறு கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி குறித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.அந்த சந்திப்பின் முடிவில்,‘தி வீக்’ ஆங்கில இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன் கன்னத்தில் ஆளுநர் தட்டிவிட்டு சென்றது சர்ச்சையானது.இந்நிலையில் கனிமொழி எம்.பி. இந்த விவகாரத்தில் பத்திரிகையாளருக்கு ஆதரவாக பதிவு வெளியிட்டார்.
இதையொட்டி ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,”தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிரூபர்கள் கேள்வி கேட்பார்களா மாட்டார்கள்.சிதம்பரம் உதயகுமார்,அண்ணாநகர் ரமேஷ்,பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.” என பதிவிட்டார்.
அவரின் இந்தப் பதிவு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியது.இதனால் திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் ஹெச் ராஜாவின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.அதேபோல ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யக் கோரி பல்வேறு இடங்களில் புகார் அளித்தனர்.இந்நிலையில் திமுகவின் கணியூர் முன்னாள் பஞ்சாயத்து செயலாளர் வேலுச்சாமி என்பவர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு போலீசார் ஹெச்.ராஜா மீது இந்திய தண்டனைச் சட்டம் 500 மற்றும் 501 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.