September 8, 2018
தண்டோரா குழு
சிறையில் சசிகலா தொடர்பான விஷயங்களில் எனது பணியை மட்டும் தான் செய்தேன்.மன்னார்குடி மாஃபியா உங்களை சும்மா விடாது என்று கூட பலர் என்னிடம் கூறினார்கள்.அது பற்றி நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கர்நாடக ஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
கோவையில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் வேளாண்மை பல்கலைகழக வளாகத்தில் உள்ள கலையரங்கில்,நேர்மையாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி் நடைபெற்றது.இதில் கர்நாடக மாநில ஐ.ஜி.ரூபா பங்கேற்று நேர்மையாக செயலாற்றிய அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கினார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி.ரூபா,
“ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் மாணவர்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரவேற்கதக்கது.ஊழல் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.ஊழல் தொடர்பாக அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.சமூக மாற்றத்திற்கு நேர்மையான அதிகாரிகளின் பங்கு நிச்சயம் இருக்கும் என தெரிவித்த அவர்,நேர்மையான அதிகாரிகளை அரசுகள் விரும்புவதில்லை எனவும் தெரிவித்தார்.
தமிழக காவல்துறை தலைவர் மீதான சிபிஐ நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.வேறு மாநிலத்தை சேர்ந்த அதிகாரியாக இருப்பதால் இது குறித்து பேசுவது முறையாக இருக்காது.பரப்பன அக்ரஹார சிறையில் சிறை அதிகாரியாக என்னுடைய பணியை மட்டுமே செய்தேன்.அப்போது மன்னார்குடி மாபியாவால் ஆபத்து ஏற்படும் என பலர் தன்னை எச்சரித்ததாகவும்,ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் பரப்பன அக்ரஹார சிறையில் நடந்த செயல்களை வெளிப்படுத்தினேன் எனவும் தெரிவித்தார்.சிறைத்துறையில் எனது நடவடிக்கையினை தொடர்ந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக யாரிடமும் கேள்வி எழுப்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பரப்பன அக்ரஹார சிறையில் தற்போது என்ன நிலைமை இருக்கின்றது என்பது தனக்கு தெரியாது என கூறிய அவர்,எனது பணியிட மாற்றத்திற்கு பின்னர் புதிதாக வந்த சிறை அதிகாரி சிறையில் சசிகலா விதிமீறல் தொடர்பான அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் சமர்பித்ததாகவும்,அந்த அறிக்கை தொடர்பான தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் பெற முயற்சித்தும் தன்னால் பெற முடியவில்லை எனவும்,ஆர்.டி.ஐ விண்ணப்பம் கொடுத்தால் வேண்டும் என்றே தாமதபடுத்துவது தொடர்கின்றது என தெரிவித்தார்.
ஆர்.டி.ஐயில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வெளிப்படையான தன்மை இல்லை எனவும்,சரியான பதில் கொடுப்பதில்லை எனவும் ஐ.ஜி.ரூபா தெரிவித்தார். பரப்பன அக்ரஹார சிறை விவகாரம் தொடர்பாக தனக்கு நேரடியாக எந்த மிரட்டலும் வரவில்லை என தெரிவித்த சமூக ஊடகங்களில் பல்வேறு விதமாக கருத்துகள் வருவதாகவும் அதைபற்றி தான் கவலைப்படவில்லை எனவும் தெரிவித்தார்”.