September 6, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்.சினிமாத் துறையை தாண்டி அஜித்திற்கு கார் பந்தயம்,ஏரோமாடலிங் மீதும் ஆர்வம் அதிகம்.இதனால் சென்னை எம்.ஐ.டி. கல்லூரியின் தக்ஷா என்ற மாணவர் குழுவுக்கு ஆலோசகராக இருக்க நடிகர் அஜித்குமாரை கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
இதற்கு ஒப்புக்கொண்ட அஜித்,இக்குழுவுக்கு ஆலோசகராக இருந்தார்.அந்த குழு இந்திய அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான டிரோன் போட்டியில் முதலிடம் பெற்றது.இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறவுள்ள ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் – 2018 யுஏவி சேலஞ்ச்’ என்ற போட்டிக்கு நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும்,சென்னையைச் சேர்ந்த தக்ஷா குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக அஜித் மற்றும் தக்ஷா குழு ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.
ஒரு மருத்துவமனையிலிருந்து 30 கி.மீ தொலைவு வரை இருக்கும் இடங்களுக்குச் சென்று நோயாளிகளின் ரத்த மாதிரியைக் கொண்டு வரும் ஆளில்லா (ட்ரோன்) விமானத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்தப் போட்டியின் சவால்.சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 100 அணிகள் போட்டியிட்ட இதன் இறுதிச் சுற்றுக்கு தேர்வான 13 அணிகளில் இந்தியாவின் தக்ஷா அணியும் இடம் பெற்றுள்ளது.செப்டம்பர் கடைசி வாரம் இந்த போட்டி நடைபெறவுள்ளது.இதையடுத்து, சர்வதேச அளவில் அஜித்தின் தக்ஷா குழு வெற்றிபெற அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.