September 12, 2018
தண்டோரா குழு
உள்ளாட்சி துறை ஊழல் தொடர்பாக ஆதாரங்கள் வெளியுகியுள்ள நிலையில்,அதில் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு ஓப்பந்தங்களை கொடுக்கவில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறுக்கிறாரா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை இனப்படுகொலை செய்த முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்கு இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளதாக கூறினார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற 2014 ம் ஆண்டின் தமிழக அமைச்சரவை முடிவை செயல்படுத்த விடாமல்,மத்திய அரசு பல முட்டுக்கட்டைகளை போட்டதாக கூறிய அவர்,அரசின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் எனவும்,அதை ஆளுநர் மறுபரிசீலனை செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார்.
மேலும் மனிதாபிமான அடிப்படையில் 27 ஆண்டுகளாக சிறையில் வாழ்வே அழிந்த 7 பேரையும் ஆளுநர் தாமதமின்றி விடுதலை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊழல் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டதில் உள்ளவர்களுக்கு ஒப்பந்தங்களை கொடுக்கவில்லை என மறுக்கிறாரா என கேள்வி எழுப்பிய அவர்,உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் ஒப்பந்தங்களை கொடுத்துள்ளார் என தெரிவித்தார்.மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியை பொய் வழக்கில் சிறையில் வைக்க தமிழக அரசு முயற்சிக்கிறது எனவும்,மத்திய,மாநில அரசுகள் ஜனநாயகத்தின் குரல்வளையினை நெறித்து கொண்டிருக்கிறது எனவும் கூறிய அவர்,தமிழக அரசு பாசிச அரசாக செயல்படுகிறது என குற்றம்சாட்டினார்”.இவ்வாறு பேசினார்.