September 11, 2018
தண்டோரா குழு
என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்,நிரூபிக்க முடியாவிட்டால் பதவிகளை விட்டு ஒதுங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரா? என உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
வரலாறு கண்டிராத மெகா ஊழலில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை விசாரணை நியாயமாக நடைபெற உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 2017-18ம் நிதியாண்டில் 100 வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு டெல்லியில் தேசிய விருது வழங்கபட்டது.மத்திய அரசின் தேசிய விருதுகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,
“உள்ளாட்சி துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு 6 விருதுகளை தமிழகத்துக்கு தந்துள்ளது.என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்,நிரூபிக்க முடியாவிட்டால் பதவிகளை விட்டு ஒதுங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக அரசை கவிழ்க்க திமுக எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து வருகின்றன.முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீதும் திமுக குற்றஞ்சாட்டி வருகிறது.” இவ்வாறுக் கூறினார்.