September 15, 2018
7 பேர் விடுதலை குறித்து அரசியல் சட்டப்படி முடிவெடுக்கப்படும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதைத்தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.
இதையடுத்து, கடந்த 9-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிறையில் இருக்கும் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக இந்த தீர்மானம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர் கடந்த 11-ந் தேதி இந்த 7 பேர் தொடர்பான கோப்புகளையும் ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.
ஆனால்,7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறையிடம் ஆலோசனை கேட்டு ஆளுநர் கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மத்திய அரசுக்கு கடிதம் ஏதும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் மத்திய உள்துறைக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தேவையான ஆலோசனைகள் நடத்த வேண்டியுள்ளது.அரசியல் சட்டப் பிரச்சனை, நிர்வாகப் பிரச்சனையை ஆலோசிக்க வேண்டியுள்ளது. ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய நீதிமன்ற தீர்ப்புகள் வரப்பெற்று உள்ளன. 7 பேரின் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும்.
என கூறப்பட்டு உள்ளது.