September 15, 2018
தண்டோரா குழு
+2 மொத்த மதிப்பெண் 1200-லிருந்து 600 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர தமிழகம் முழுவதும் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்களை பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் காணொளி மூலம் திறந்துவைத்தார்.
பின்னர் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
10,11,12-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு உள்ள மன அழுத்தத்தை போக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் 1200-க்கு எழுதவேண்டியது 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. +1 தேர்வு தொடர்ந்து நடைபெறும். தேர்வில் தோல்வியுற்றால் மீண்டும் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கான முக்கியத்துவம் எவ்விதத்திலும் குறையாது. உயர்கல்வி படிக்க 11- ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்வி படிக்கச் செல்லலாம்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் பயிற்சி மையம் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில் அரசின் பயிற்சி மையங்கள் மூலம் 27 மாணவர்கள் தேர்வானார்கள். இந்த ஆண்டில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வாவார்கள். ஐ.ஐ.டி.யில் சேருவதற்கான ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. நீட் தேர்வுக்காக மாணவர்கள் வேறு மாநிலம் செல்ல வேண்டி இருக்காது. 250 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ப்ளாஸ்டிக் தடை இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை மூலமாக,மாணவர்கள் பாலித்தீன் பயன்படுத்துவது தடுக்கப்பட்டிருக்கிறது. மதிப்பெண் குறைக்கப்பட்டது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.