January 6, 2026
தண்டோரா குழு
சிங்கப்பூரில் 2025 டிசம்பர் 5 முதல் 7 வரை நடைபெற்ற ஐரோப்பிய மருத்துவ புற்றுநோயியல் சங்கத்தின் (European Society for Medical Oncology – ESMO) ஆசிய மாநாட்டில், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் (KMCH) ஆராய்ச்சி அறக்கட்டளை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
இந்த மாநாட்டில் கேஎம்சிஹெச் ஆராய்ச்சி அறக்கட்டளையை சேர்ந்த ஆய்வாளர் செல்வி ஸ்ரீநிதி நாராயணி சீனிவாசன் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். உலகெங்கிலும் இருந்து சமர்ப்பிப்பட்ட நூற்றுக்கணக்கான ஆய்வுகளில், இவரது பணிக்கு ‘சிறந்த ஆய்வறிக்கை’ (Best Poster Award) விருது வழங்கப்பட்டது.
உடலில் குடல், வாயரை , தோல் மற்றும் பிறப்புறுப்பில் நுண்ணுயிரிகள் உள்ளன. பொதுவாக நுண்ணுயிர்கள் இல்லாத இடமாக கருதப்படும் இடம் மார்பகம். மார்பக புற்றுநோய் திசுக்களில் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. இதற்காக மார்பக புற்றுநோயாளிகளிடம் இருந்து 93 புற்றுநோய் கட்டி திசுக்கள் மற்றும் அருகிலுள்ள திசுக்கள் மரபணு தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
புற்றுநோய் வளர்ச்சியில் இவற்றின் பங்கு மற்றும் சிகிச்சையின்போது அவை எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஶ்ரீ நிதியின் 4 வருட கடுமையான உழைப்பினால் உருவான உலகில் முதலாவது மார்பக புற்றுநோயில் நுண்ணுயிரிகளின் பங்கு குறித்த ஆய்வறிக்கை என்பதற்காக சிறந்த போஸ்டர் விருது மற்றும் பெருமைக்குரிய ESMO பயண உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வுக்கான ஆராய்ச்சி குழுவில் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியாளர் முனைவர் ஜி. வேல்முருகன் மற்றும் கேஎம்சிஹெச் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்தின் மருத்துவ குழுவினர் டாக்டர் ஃபிரோஸ் ராஜன் மற்றும் டாக்டர் எழிற்செல்வன் சிதம்பரசாமி ஆகியோரும் மற்றும் நோயியல் வல்லுநர் டாக்டர் சங்கீதா மேத்தா, கேஎம்சிஹெச் ஆராய்ச்சி அறக்கட்டளையை சேர்ந்த முனைவர் எஸ் மோகன்ராஜ் மற்றும் டாக்டர் அருள்ராஜ் ராமகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றனர். இந்திய அரசின் ‘அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை’ (ANRF) இந்த ஆய்விற்குத் தேவையான நிதியுதவியை வழங்கியுள்ளது.
மருத்துவமனையின் தலைவரும் நிறுவன அறங்காவலருமான டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி பேசுகையில்,.
“அதிநவீன ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, அடாப்டிவ் ரேடியோதெரபி, BiTE, CAR-T செல்தெரபி முதலான முன்னேறிய சிகிச்சை வசதிகளுடன் புற்றுநோய் மருத்துவத்தில் கேஎம்சிஹெச் முன்னணி மையமாகத் திகழ்கிறது. மேற்கத்திய ஆய்வுகள் அனைத்து சமயங்களிலும் இந்திய நோயாளிகளுக்கு ஏன் பரவாத நோய்களும் புற்றுநோயும் வருகிறது என்பதற்கான பதில் தர இயலாத சூழ்நிலைகளில் விடை அளிக்கும் நோக்கத்துடன் கேஎம்சிஹெச் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது.இத்தகைய ஆராய்ச்சிப் பணிகள் நோய்க்கான மூல காரணங்களைக் கண்டறியவும், வருங்காலத்தில் புற்றுநோயைத் தடுக்கவும் புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கவும் பெரிதும் உதவும்” என்று குறிப்பிட்டார்.
சென்னை ஐஐடி மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்தும், ICMR/DBT/DST/ANRF ஆகிய அமைப்புகளின் நிதிஆதரவுடன், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் (KMCH) ஆராய்ச்சி அறக்கட்டளை செயல்படுத்தப்படுகிறது. புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி திட்டங்களுக்கு கேஎம்சிஹெச் ஆராய்ச்சி நடவடிக்கைகள் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.