May 20, 2026
தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசுக்கு,தமிழ்நாடு திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
மேலும்,தமிழகத்தில் நல்லாட்சி நிலவவும், மக்கள் முன்னேற்றம் மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்காக அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம் கோவை மண்டல தலைவர் R.கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சில திருக்கோவில்களில் வருமானம் மற்றும் நிர்வாகம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்கள் எழாமல், நேர்மையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை உறுதி செய்வதே எங்கள் சங்கத்தின் நோக்கமாகும்.
எங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என்ற நிலைப்பாடு இல்லை. மாறாக, திருக்கோவில் நிர்வாகம் வெளிப்படையாகவும், நெறிப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்களது முக்கிய கோரிக்கையாகும், என்று தெரிவித்தார்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருக்கோவில்கள் தொடர்பாக முதலமைச்சரிடம் சில முக்கிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
அவை பின்வருமாறு:
1. முன்னோர்கள் உருவாக்கிய திருக்கோவில்களுக்கு, அவர்களின் வாரிசுகளை மட்டுமே பரம்பரை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும்.
2. திருக்கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களை சட்டப்பூர்வ நிர்வாகிகளாக இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரிக்க வேண்டும்.
3. மாநில மற்றும் மண்டல அளவிலான திருக்கோவில் நிர்வாக மற்றும் திருப்பணி குழுக்களில் பரம்பரை அறங்காவலர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
4. இந்து சமய அறநிலையத்துறையின் உயர்மட்ட குழுக்களிலும் தமிழ்நாடு திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் R. கிருஷ்ணசாமி, செயலாளர் N.ராம்குமார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.