August 17, 2026
தண்டோரா குழு
கோவையில் தேசிய அளவிலான பிரமாண்ட குதிரையேற்றப் போட்டியான ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – சீசன் 2’ வரும் ஆகஸ்ட் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில் இந்தியாவின் முன்னணி குதிரையேற்ற வீரர்கள் தங்களது குதிரைகளுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன. இதன் இரண்டாவது சீசனுக்கான அறிமுக நிகழ்ச்சி கோவையில் உள்ள ஜென்னி கிளப்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஈக்வெஸ்ட்ரியன் லீக் ஆலோசகரும்,எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், கோயம்புத்தூர் மாவட்ட குதிரையேற்ற சங்கத்தின் தலைவர் மற்றும் வழிகாட்டுநருமான டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை அறிமுகப்படுத்தினார்.இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் தலைவர் ஏ.எஸ். சக்தி பாலாஜி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சென்னை புல்ஸ் அணியைச் சேர்ந்த பாரத் மனோகரன்,பெங்களூரு நைட்ஸ் அணியைச் சேர்ந்த திலீப்,கோல்கொண்டா சார்ஜர்ஸ் அணியைச் சேர்ந்த நவீன், பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் அணியைச் சேர்ந்த கிருஷ்ணா மற்றும் எலைட் ஈக்வெஸ்ட்ரியன்ஸ் அணியைச் சேர்ந்த பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
6 மாநில அணிகள் பங்கேற்பு
வெள்ளானைப்பட்டியை அடுத்த மோளப்பாளையம் பகுதியில் உள்ள ‘பிசைட் தி பவர் ஹவுஸ்’ தனியார் மைதானத்தில் மூன்று நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளன.இந்த சீசனில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, கோவா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் களமிறங்குகின்றன.
– சென்னை புல்ஸ் – தமிழ்நாடு
– பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் – கேரளா
– கோல்கொண்டா சார்ஜர்ஸ் – தெலங்கானா
– பெங்களூரு நைட்ஸ் – கர்நாடகா
– குவாண்டம் ரெயின்ஸ் – கோவா
– எலைட் ஈக்வெஸ்ட்ரியன்ஸ் – மேற்கு வங்கம்
பாரத் மனோகரன்,சூர்யா,பாலமுருகன், ஸ்ரேஷ்த், பாலாஜி விஜயசங்கர், ஹாஷினி, அவிக் பாட்டியா, நீல் கெண்டல், கிரண், ஹர்சித் மற்றும் ஆராதனா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஷோ ஜம்பிங்கில் வீரர்களின் திறமை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக், முன்னணி குதிரையேற்ற வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தொழில்முறை தளத்தை உருவாக்குவதுடன், இந்தியாவில் குதிரையேற்ற விளையாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் நோக்கில் நடத்தப்படுவதாக ஏ.எஸ். சக்தி பாலாஜி தெரிவித்தார்.
போட்டிகள் 110 செ.மீ. மற்றும் 120 செ.மீ. என இரண்டு பிரிவுகளில் நடைபெறுகின்றன. போட்டியாளர்களின் செயல்பாடுகளை புதுடெல்லியைச் சேர்ந்த சர்வதேச குதிரையேற்ற கூட்டமைப்பான FEI அங்கீகரித்த நடுவர்கள் மதிப்பீடு செய்ய உள்ளனர்.மேலும், ஷார்ஜாவைச் சேர்ந்த சர்வதேச அளவிலான போட்டிப் பாதை வடிவமைப்பாளர் போட்டிக்கான பாதையை வடிவமைக்க உள்ளார். போட்டியில் மொத்தம் ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
6,000 பார்வையாளர்களுக்கு வசதி
ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர், திரையுலகப் பிரபலங்கள்,கோவை தொழிலதிபர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியிலும் விளையாட்டு மற்றும் குதிரையேற்றத் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
போட்டி நடைபெறும் மைதானத்தில் சுமார் 6,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை, பாதுகாப்பு மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக், தனது முதல் சீசனை 2025 ஜூலை மாதம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் நடைபெறுகிறது.
இந்தியாவில் ஷோ ஜம்பிங் மற்றும் குதிரையேற்ற விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதும், வீரர்களுக்கு தொழில்முறை வாய்ப்புகளை உருவாக்குவதும் லீக்கின் முக்கிய நோக்கங்களாகும்.
குதிரையேற்ற விளையாட்டு ஆர்வலர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் போட்டிகளை நேரில் கண்டு ரசிக்கும் வகையில் இலவசமாக பார்வையிடும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி குதிரையேற்ற வீரர்களும் குதிரைகளும் ஒரே களத்தில் பங்கேற்க உள்ளதால், மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டி கோவை விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக்கெட்டுகள்: Ticketprix.com
மேலும் விவரங்களுக்கு: 89258 04911