October 15, 2018
தண்டோரா குழு
தமிழக அரசு சொத்து வரி,தொழில் வரி உள்ளிட்ட வரிகளை வசூலித்த போதும் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தராததால் தோட்ட தொழிலதிபர்களுக்கு கூடுதல் செலவீனம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தோட்ட தொழிலதிபர்கள் சங்கத்தின் 65 வது ஆண்டு குழு கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தொழிலாளர் நலத்துறை தலைமை செயலாளர் சுனில் பாலிவால் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் செயலாளர் பிரதீப் சுகுமார்,
“தோட்ட அதிபர்களால் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் வீடுகளுக்கு அரசு சொத்து வரி வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும்,சொத்துவரி,தொழில் வரி உள்ளிட்ட வரிகளை வசூலித்த போது அரசு தொழிலாளர் குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை என்பதால் தொழிலதிபர்களுக்கு கூடுதல் செலவீனம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தற்போதைய மழை காரணமாக மலைகளில் அமைந்துள்ள தேயிலை,காப்பி,ரப்பர் போன்ற தோட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் அதிபர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சீர்செய்யும் வகையில் நீண்ட கால மற்றும் குறுங்கால கடனுதவிகளையோ அல்லது மானிய தொகைகளையோ வழங்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தொழிலாளர் பிடித்த தொகைகளை வழங்குவது தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்கள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் நலத்துறையில் அது தொடர்பான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அது தொடர்பாக தீர்வு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.தொடர் மழை காராணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு தொடர்பாக ஆண்டு இறுதியிலேயே கணிக்க முடியும் என குறிப்பிட்ட அவர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 5 சதவீதம் அளவிற்கு கேளிக்கை விடுதிகள் அல்லது எக்கோ டூரிசம் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறுத்தினார்”.