September 15, 2018
தண்டோரா குழு
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் விழுப்புரத்தில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் விழா நடைபெற்றது. விழாவில் முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் விழாவில் பேசிய முக.ஸ்டாலின்,
கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதியை செம்மொழி நாளாக கொண்டாடுவோம். திமுக சார்பில் ஆண்டுதோறும் இளம் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்றும், கலைஞர் அறக்கட்டளை சார்பில் ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்படும். கட்சியின் நிறை, குறைகளை யார் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கூறலாம். மானம் மரியாதையை அடமானம் வைத்துவிட்டு தமிழகத்தில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழலோ ஊழல். அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட திமுகவில் ஒவ்வொரு தொண்டனும் உறுதியேற்க வேண்டும்.
மத்திய பாஜக அரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டில் வறுமை ஒழிந்துவிட்டதா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டதா? என்னுடைய பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். கருணாநிதி மகன் சாதித்தான் என்பதை நிரூபிக்க வேண்டும், அதற்கு நீங்கள் உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.