August 24, 2018
தண்டோரா குழு
தனிமைச் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்த தாம் என்ன தீவிரவாதியா என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் வேதனையடைந்துள்ளார்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திஅனுமதியின்றி பேரணியாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததாக கைது செய்யப்பட்டார். ராயப்பேட்டை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ஆகஸ்ட் 24 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு மேலும் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது தனக்கு உரிய மருத்துவ உதவி வழங்கப்படுவதில்லை என நீதிபதியிடம் திருமுருகன் காந்தி முறையிட்டார். இதை கேட்ட நீதிபதி, உரிய மருத்துவ வசதிகள் திருமுருகன் காந்திக்கு வழங்க ஜெயில் சூப்ரிண்டண்டிற்கு உத்தரவிட்டார்.
பின்னர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
”காவல் துறை சிறுநீர் கழிக்க கூட அனுமதி தர மறுக்கிறது. நீதிபதிகள் கூறியும் மருத்துவ உதவி அளிக்க காவல் துறை மறுக்கிறது. உறவினர்கள் பார்க்க முடியாத அளவிற்கு தனிமை சிறையில் அடைத்து வைத்துள்ளனர். தனிமைச் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்த தாம் என்ன தீவிரவாதியா? அதுமட்டுமல்லாமல் பயங்கரவாதிகள் மீது போடப்படும் UAPA வழக்கு என் மீது போடப்பட்டுள்ளது. பாஜக அரசை எதிர்த்து பேசினால் பயங்கரவாதி வழக்கு பதியப்படுமா” என்றார்.
மேலும், எஸ்.வி.சேகரை கைது செய்ய முடியாத போலீஸின் நேர்மையை பார்த்து உலகம் சிரிக்கிறது. இதற்கெல்லாம் அஞ்ச போவதில்லை எனக் கூறினார்.