January 31, 2026
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த அத்வைத் ராவ் மற்றும் அம்ரிதா ரமேஷ் எனும் +2 பயிலும் பள்ளி மாணவர்கள் ‘சிக்கு ப்ராஜெக்ட்’ என்ற விலங்கு நல அமைப்பை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தெருநாய்கள் நலன் கருதியும், தெருநாய்கள் மூலம் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பதை மனதில் வைத்து சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் தங்களது சேவையை சமுதாயத்திற்கு செய்து வருகின்றனர்.
ஹியூமேன் அனிமல் சொசைட்டி, பாசம் பீப்பிள் ப்ராஜெக்ட் மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் போன்ற நன்கு நிறுவப்பட்ட அமைப்புகளின் வழிகாட்டுதலுடன் இவர்கள் செயல்படுகின்றனர்.
தற்போது,தெரு நாய்களின் எண்ணிக்கையை சரியான முறையில் கட்டுப்படுத்தும் நோக்கில், ‘பிடித்தல்–கருத்தடை செய்தல்–மீண்டும் விடுவித்தல்’ என்ற அடிப்படையில் ஒரு பெரிய அளவிலான கருத்தடைத் திட்டத்தை இந்த மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.
சிக்கு ப்ராஜெக்ட் அமைப்பின் நிறுவனர்களான அத்வைத் ராவ் மற்றும் அம்ரிதா ரமேஷ் ஆகியோர், கோவை ரோட்டரி சென்ட்ரல் சங்கத்தின் நிதி உதவி உடனும், நிபுணத்துவம் வாய்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன்’சிக்கு கருத்தடை திட்டத்தை’ சனிக்கிழமை அன்று தொடங்கினர்.
இந்தத் தொடக்க விழா ரேஸ்கோர்ஸில் உள்ள புகழ்பெற்ற காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நடைபெற்றது.விழாவில், கோவை ரோட்டரி சென்ட்ரல் சங்கத்தின் தலைவர் விஜயானந்த் மற்றும் செயலாளர் சீதாராம் ஆகியோர் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை அத்வைத் ராவ் மற்றும் அமிர்தா ரமேஷிடம் வழங்கினர்.
அவர்கள் சார்பில் ஹியூமேன் அனிமல் சொசைட்டயின் நிறுவனத் தலைவர் மினி வாசுதேவன்,அதன் செயல்பாட்டு மேலாளர் அபிநயா,பாசம் பீப்பிள் ப்ராஜெக்ட்டின் நிறுவனத் தலைவர் மேகா ஜோஸ், அதன்
செயல்பாட்டுத் தலைவர் மேரி சாண்டி பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அத்வைத் ராவ்,
கோடை காலத்தில் தெரு நாய்களின் தாகத்தைத் தீர்க்க தானும் தன் சக மாணவியான அம்ரிதாவும் எடுத்த சிறிய முயற்சி, இன்று பொதுமக்களுக்கும் நாய்களுக்கும் பயனளிக்கும் வகையில் நாய்கள் தொகையை முறைப்படி, மனிதாபிமான முறையில் நிபுணர்கள் உதவியுடன் கட்டுப்படுத்தும் பெரும் கருத்தடை திட்டமாக வளர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
பாசம் பீப்பிள் ப்ராஜெக்ட், ஹியூமேன் அனிமல் சொசைட்டி மற்றும் சிக்கு ப்ராஜெக்ட் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இந்த இலக்கை படிப்படியாகச் செயல்படுத்தும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமிர்தா ரமேஷ், ஹியூமேன் அனிமல் சொசைட்டி அமைப்புடன் இணைந்து கோயம்புத்தூரில் நாய்கள் கருத்தடை நடவடிக்கை தேவைப்படும் முக்கிய பகுதிகளை கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார்.
“பாசம் பீப்பிள் ப்ராஜெக்ட் தன்னார்வலர்கள் முதலில் நாய்களை மனிதாபிமானத்துடன் பிடிப்பார்கள்.ஹியூமேன் அனிமல் சொசைட்டி அமைப்பு அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்புப் பணிகளைச் செய்யும், மேலும் நிபுணர்கள் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையை மேற்கொள்வார்கள். சிக்கு ப்ராஜெக்ட் குழுவினர் இந்த முழுப் பணிகளையும் ஒருங்கிணைப்பார்கள்,” என்று அவர் விளக்கினார்.
முதற்கட்டமாக ஆண்டுக்கு சுமார் 200 நாய்களுக்குக் கருத்தடை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக அத்வைத் தெரிவித்தார். இதனுடன் விழிப்புணர்வு நிகழ்வுகள், நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்டப் பணிகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும், எதிர்காலத்தில் அதிகப் பகுதிகளை உள்ளடக்கி விலங்குகளின் துயரம் மற்றும் பொதுமக்களுடனான மோதல்களைத் தவிர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தங்களின் செயல்பாடுகள் குறித்து மேலும் அறிய சமூக வலைதளங்களில் @chikooforindies பக்கத்தைப் பின்தொடரலாம் அல்லது 98430 14354 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.