• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்திற்கு 2019-20-ம் கல்வியாண்டில் ரூ.21.73 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை

January 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திற்கு 2019-20-ம் கல்வியாண்டில் ரூ.21.73 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ஆட்சியர் ராஜாமணி முன்னிலையில், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர் தெரிவித்ததாவது:

பிற்படுத்தபட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம், விலையில்லா சலவைப்பெட்டி மற்றும் விலையில்லா தையல் இயந்திரம், கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், பேரறிஞர் அண்ணா விருது, டாம்கோ, டாப்செட்கோ கடன் உதவி திட்டங்கள், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தில் கோவை மாவட்டத்திற்கு வரப்பெற்ற 17 ஆயிரத்து 232 விலையில்லா மிதிவண்டிகளில் 12 ஆயிரத்து 128 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளளன. மீதமுள்ள 5 ஆயிரத்து 104 மிதிவண்டிகளை மாணவர்களுக்கு விரைந்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் 3-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த அனைத்து மாணவியர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு தலா ரூ.500வீதம் கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு திட்டம் மூலம் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் 422 பயனாளிகளுக்கு சுய தொழில் செய்ய மற்றும் ஆழ்துளை கிணறு போன்ற திட்டங்களுக்காக ரூ.193.47 லட்சம் கடன் உதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் டாம்கோ லோன் மூலம் ரூ.1.36 கோடி கடன் உதவி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்த 36 ஆயிரத்து 764 மாணவர்களுக்கு, 2019-20-ம் கல்வியாண்டில் ரூ.21.73கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அதிக அளவிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க