September 24, 2025
தண்டோரா குழு
கோவை ஆர்.எஸ்.புரம் அருகில் உள்ள பூமார்க்கெட்டில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து இருந்த சட்டக் கல்லூரி மாணவி ஜனனி மற்றும் ஒரு மலர் கடை உரிமையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை முழுவதும் இருந்து தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் வருகை தரும் இந்த மார்க்கெட்டில்,நேற்று முன்தினம் மலர் வாங்க வந்த ஜனனி ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து இருந்ததை குற்றம் கூறி, ஒரு கடை உரிமையாளர் இப்படி உடை அணிந்து வரக் கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது.இதற்கு எதிராக ஜனனி, உடையில பிரச்னை இல்லை, உங்கள் பார்வையில் தான் பிரச்னை என பதில் அளித்தார்.
இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
வீடியோ பதிவு செய்யும் போது, சிலர் தடுத்ததுடன், ஜனனியை மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனனி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து உள்ளார். அதே நேரத்தில், ஜனனி மற்றும் அவரது நண்பர் மீது சில பூ வியாபாரிகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
இந்நிலையில், பூமார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது :
அதில் அந்தப் பெண் என்ன செய்தார் என்பதை தெரியாமல் அனைவரும் தவறாக வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். பெண்களின் ஆடை சுதந்திரத்தை யாரும் மறுக்கவில்லை. ஆனால் ஸ்லீவ் பிளஸ் உடை அணிந்து வந்த ஜனனி என்பவர் அங்கு நின்று கொண்டு கைகளை தூக்கி ரீல்ஸ் வீடியோக்களை எடுத்துக் கொண்டு இருந்தார்.
அது மற்றவர்களின் பார்வையில் தவறாக படக் கூடாது என்பதற்காகவே, கடை உரிமையாளர் நல்ல முறையில் அறிவுறுத்தியதை தவறாக புரிந்து கொண்டதால் பிரச்சினை ஏற்பட்டது, அன்று யாரும் அந்த பெண்ணை மிரட்டவில்லை, இதுபோன்று உடை அணிந்து வர வேண்டாம் என்பதைத் தான் அங்கு இருந்த வியாபாரிகளும் பொருளாளர் சண்முகசுந்தரமும் வலியுறுத்தினர்.
பத்திரிகைகள் பெண்களை காப்பாற்றுவதற்காக செயல்பட வேண்டுமே தவிர,பெண்களை கற்பழிக்கும் செயல்களுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது, உடைகளை அணிவது அவர்களின் சுதந்திரம்,ஆனால் எங்கு ? அணிய வேண்டும் என்பது இருக்கிறது. செய்தியாளர்களும் இந்த செய்தியை வியாபார நோக்கத்தில் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தி கூறி உள்ளனர்.