April 19, 2026
தண்டோரா குழு
கோயம்புத்தூர் குணியமுத்தூர் பகுதியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் எழுச்சிமிகு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
கோவை மாநகராட்சி, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் 44 குடியிருப்பு சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த பேரணியை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையர் தச்சினாமூர்த்தி அவர்கள் பார்க் அவென்யூ பூங்காவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஆர்வத்துடன் பங்கேற்றனர்.பேரணி பார்க் அவென்யூ பூங்காவிலிருந்து தொடங்கி சாய் கார்டன், பாலக்காடு பிரதான சாலை, ரைஸ் மில் சாலை மற்றும் அம்மன் கோவில் சாலை வழியாக முன்னேறியது.
பின்னர் ராஜகோபால் நகர்,சக்தி நகர், நிர்மலமாதா கான்வென்ட் சாலை மற்றும் திருநாவுக்கரசு நகர் பகுதிகளைச் சுற்றி, வாசன் ஐ கேர் சந்திப்பில் திரும்பியது. தொடர்ந்து ரங்கசாமி நாயுடு நகர் வழியாகச் சென்று சுப்புலட்சுமி நகர் 6-வது தெரு பூங்காவில் பேரணி நிறைவடைந்தது.
பேரணி நடைபெற்ற வழித்தடம் முழுவதும் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடியிருப்பு சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் அப்துல் ஹக்கீம், ஒருங்கிணைப்பாளர் நிசார் அகமது மற்றும் குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.