July 25, 2026
தண்டோரா குழு
கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிடல், 2250-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளைக் கொண்ட ஒரு முன்னணி உயர்நிலை அதி சிறப்பு மருத்துவமனையாகும் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக,மருத்துவத் துறையின் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை உடனுக்குடன் புகுத்தி, மக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள ஒரு சிறந்த மருத்துவமனையாக விளங்கி வருகிறது.
இங்குள்ள குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைக்கான சிறப்பு மையம், அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது.இதில் கல்லீரல் செயலிழப்புக்கான தனிப்பிரிவு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட வெளிப்புற நோயாளிப் பிரிவு மற்றும் ஆறு நவீன எண்டோஸ்கோபி அறைகள் அடங்கிய அதிநவீன எண்டோஸ்கோபி பிரிவு ஆகியவை உள்ளன. அனுபவம் வாய்ந்த குடல் நோய் நிபுணர்கள், கல்லீரல் மருத்துவ நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழுவினர், நோயாளிகளுக்குக் குறைந்த செலவில் தகுந்த கவனிப்புடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்கி வருகின்றனர்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் இம்மையம் பெரும் நம்பிக்கை பெற்றுள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் இங்குச் சிறப்பாகச் செய்யப்படுகின்றன. மேலும், பித்தப்பை மற்றும் கணையக் கற்களை நீக்கும் அதிநவீன எண்டோஸ்கோபி சிகிச்சை முறைகள் இங்கு வழங்கப்படுகின்றன.மருத்துவத் துறையில் தொடர் கற்றலை ஊக்குவிக்கும் நோக்கில், கேஎம்சிஹெச் மருத்துவமனை கடந்த பல ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.இந்த ஆண்டிற்கான கல்லீரல் மற்றும் குடல் நோய்கள் குறித்த “கேஸ்ட்ரோ ஹெப்கான்” மருத்துவ கருத்தரங்கு, 2026 ஜூலை 25 அன்று கே.எம்.சி.ஹெச் அரங்கில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி பேசுகையில்,
“குடல் நோய், கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறைகளில் தொடர் கற்றலுக்கும், மருத்துவச் சிறப்பிற்கும் நாங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு இந்த கருத்தரங்கே சான்று. உலகின் முன்னணி மருத்துவ நிபுணர்களை ஒன்றிணைப்பதன் மூலம், அறிவைப் பகிர்வதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கு அதிநவீன மற்றும் நோயாளி நலன் சார்ந்த மருத்துவச் சேவைகளை வழங்குவதே எங்கள் நோக்கம்” என்று கூறினார்.
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி தனது உரையில்,
மருத்துவமனையின் வெற்றிக்குக் கூட்டுமுயற்சியும் புதிய கண்டுபிடிப்புகளுமே காரணம் எனக் குறிப்பிட்டார். கேஸ்ட்ரோ ஹெப்கான்” போன்ற நிகழ்வுகள் மூலம் எங்களது மருத்துவக் குழுவினர் புதிய மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது, இது நோயாளிகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சையளிக்க உதவுகிறது” என்றும் அவர் கூறினார்.
முதன்மை விருந்தினராகப் பத்மபூஷன் பேராசிரியர் கே.ஆர்.பழனிசாமி கலந்துகொண்டார்.மேலும் இக்கருத்தரங்கில் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் டேரியஸ் எம் மிர்சா,சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் எட்வர்ட் சியோங் சீ கியோங், இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் முகமது தௌஃபிக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த முன்னணி மருத்துவ வல்லுநர்கள்,இத்துறையின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சிறந்த சிகிச்சை முறைகள் குறித்துப் பேசினர். இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், இங்கு நடைபெற்ற உரைகளும் விவாதங்களும் மிகச் சிறப்பாக இருந்ததாகவும், இது அவர்களின் அன்றாட மருத்துவப் பயிற்சிக்குப் பெரிதும் உதவும் என்றும் தெரிவித்தனர். இக்கருத்தரங்கில் 250கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.