September 25, 2018
தண்டோரா குழு
கோவையில் நொய்யல் ஆற்றில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த பேரூரைச் சேர்ந்த முருகதாஸின் மகன் விக்கி (22) என்ற விக்னேஷ். இவருக்கு திருமணமாகி ஒரு வயது குழந்தை உள்ளது. இவர் பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். கோவையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விக்னேஷ் இன்று மாலை அவரது நண்பர்களுடன் பேரூர் கோயிலில் உள்ள நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
பின்னர் சுமார் 5.30 மணியளவில் அங்குள்ள தண்ணீர் குழாயில் கை கால்கள் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென விக்னேஷ் மீது இடி, மின்னல் விழுந்தது. இதில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைவாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில், இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது உடலைப் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டது.
ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் மீது மின்னல் தாக்கி பலியான சம்பவம் கோவையில் பெரும் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.