February 5, 2026
தண்டோரா குழு
2026-ஆம் ஆண்டின் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் (PSG Integrated Cancer Care Centre), கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் (CCF) மற்றும் இந்திய மருத்துவ சங்கம் (IMA) ஆகியவற்றுடன் இணைந்து சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
இந்த ஆண்டு உலகளாவிய ரீதியில் கடைபிடிக்கப்படும் “United by Unique” (தனித்துவத்தால் ஒன்றுபட்டோம்) என்ற கருப்பொருளை மையமாக வைத்து இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
நம்பிக்கையின் அடையாளமாக ‘ஒற்றுமையின் மரம்’ நிகழ்ச்சியின் தொடக்கமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தங்களின் மன உறுதியை வெளிப்படுத்தும் விதமாக, ஊக்கமளிக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ‘ஒற்றுமையின் மரம்’ (Tree of Unity) என்ற மரத்தில் கட்டினர்.
இது ஒவ்வொருவரின் போராட்டமும் தனித்துவமானது என்றாலும்,அந்தப் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது.
பி.எஸ்.ஜி.மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆர்க்கெஸ்ட்ரா இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.தொடர்ந்து, புற்றுநோயை வென்று சாதனை படைத்தவரும்,பிரபல TEDx பேச்சாளருமான டாக்டர் சங்கீதா ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில்,
”புற்றுநோய் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல;அது ஒரு புதிய தொடக்கம்.மன உறுதி இருந்தால் எதையும் வெல்லலாம் என்பதற்கு எனது பயணமே சாட்சி,” என்று கூறி நோயாளிகளுக்குப் பெரும் ஊக்கமளித்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக,இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) கோவை கிளை சார்பில் நோயாளிகளுக்கு ஆரோக்கிய பரிசுத் தொகுப்புகள் (Health Hampers) வழங்கப்பட்டன. இது நோயாளிகள் மீதான சமூகத்தின் அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.
பி.எஸ்.ஜி. புற்றுநோய் நிறுவனத்தின் இந்த முன்னெடுப்பு, புற்றுநோய் குறித்த பயத்தைப் போக்கி,ஆரம்பக்கால கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்தியது. “காணப்பட்டோம், கேட்கப்பட்டோம், மதிக்கப்பட்டோம்” என்ற உணர்வுடன் நோயாளிகள் இந்நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.