December 17, 2025
தண்டோரா குழு
கோவையில் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ள விழாவில் இளம் படைப்பாளிகள் 5 பேருக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது வழங்கப்படுகிறது.
கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு சார்பில், தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் கலைநயமிக்க விருதுச் சிற்பம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
ஏற்கெனவே இந்த விருது எழுத்தாளர்கள் ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ.முத்துசாமி, ராஜ் கௌதமன், அபி, சுரேஷ்குமார இந்திரஜித், விக்ரமாதித்யன், சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர், இரா.முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த புதுச்சேரி எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார். கவிஞர், புனைவெழுத்தாளர் மற்றும் இலக்கியச் சிந்தனையாளர் என்ற பன்முகங்களைக் கொண்ட ரமேஷ் பிரேதனின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பாகும். எனவே, நடப்பாண்டு விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதனின் விருப்பப்படியே அவரது நினைவுடன் 5 இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்க அரங்கில் வரும் டிசம்பர் 21-ம் தேதி மாலை நடைபெறும் விழாவில் விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.
நடப்பாண்டு விருது எழுத்தாளர்கள் தேவி லிங்கம், சஜு, செல்வகுமார் பேச்சிமுத்து, அசோக் ராம்ராஜ், அழகிய மணவாளன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. சிறுகதை, கவிதை, நாவல், நாட்டாரியல் ஆய்வு, நாட்டுப்புறக் கலை, மொழிபெயர்ப்பு, செவ்வியல் கலை என பல்வேறு தளங்களிலும் இயங்கி வரும் இளம் படைப்பாளிகளான இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கம், கலைநயமிக்க விருதுச் சிற்பம் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இந்நிகழ்வில் ரமேஷ் பிரேதன் குறித்து எழுத்தாளர் அகரமுதல்வன் இயக்கியுள்ள ‘அம்மை அப்பன் அயோனிகன்’ எனும் ஆவணப்படம் திரையிடப்படுகிறது.
இந்த விருது விழாவில் தெலுங்கு எழுத்தாளர் மதுராந்தகம் நரேந்திரா, கன்னட எழுத்தாளர் கவிஞர் ஜெயந்த் காய்கினி, திரு. ஆஸ்டின் செளந்தர், எழுத்தாளர் அகரமுதல்வன் ஆகியோருடன் எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
விழாவின் முதல் நாள் (டிச. 20) காலை இலக்கிய விவாதங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் பல்வேறு படைப்பாளிகள், எழுத்தாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளார்கள், மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். அவர்களிடம் வாசகர்கள் உரையாடலாம். விழா அரங்கில் சிறு புத்தகக் கண்காட்சியும் அமைக்கப்படும்.
இந்தியாவின் முதன்மையான இலக்கிய நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கது விஷ்ணுபுரம் இலக்கிய விருது. ஏனெனில், தீவிரமான இலக்கிய ஆர்வமிக்க வாசகர்களாலேயே இவ்விழா ஒருங்கிணைக்கப்படுகிறது. நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு செழுமை சேர்த்த முன்னோடிப் படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விஷ்ணுபுரம் இலக்கிய விருது, நடப்பாண்டில் எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் நினைவைப் போற்றும் வகையில் ஐந்து இளம் படைப்பாளிகளுக்கு வழங்குவது பெருமைக்குரியது என்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.