October 6, 2026
தண்டோரா குழு
கேஎம்சிஹெச் மருத்துவமனையின் நீரிழிவு சிகிச்சை மற்றும் சுரப்பியல் துறை சார்பில் தைராய்டு மருத்துவம் குறித்தான சர்வதேச கருத்தரங்கு கடந்த மாதம் நடைபெற்றது. தைராய்டு குறித்து பற்பல ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
பல புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட புதிய ஆராய்ச்சிகள், பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் குறித்து அறிந்துகொள்ள இக்கருத்தரங்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. மேலும் தைராய்டு, பிட்யூட்டரி மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிறந்த சிகிச்சை முறைகள் குறித்தும் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து பல மருத்துவ வல்லுனர்கள் சுமார் 300-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சுரப்பியல், நீரிழிவு, மகளிர் மருத்துவம் ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களை அறிந்துகொள்வதற்கு இக்கருத்தரங்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்திருந்தது என்று குறிப்பிட்ட கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
கேஎம்சிஹெச் மருத்துவமனையின் நீரிழிவு மற்றும் சுரப்பியல் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் சிவஞானம், வித்யா ஜஹாகிர்தர், சங்கர் தண்டபாணி மற்றும் துரைராஜ் அர்ஜுனன் ஆகியோர் கருத்தங்கிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்கு கேஎம்சிஹெச் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் Dr.அருண் பழனிச்சாமி பாராட்டினார். இக்கருத்தரங்கில் தைராய்டு மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் வல்லுனர் குழுவின் சுவராசியமான விவாதம் மற்றும் கேள்வி பதில் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.